About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 25 மார்ச், 2024

ஒலியா கிலியா?

என் பதிவினையொட்டி ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருக்கிறார்.

“நாம் சிறுவயதிலிருந்தே கஙசஞ உச்சரிக்கும் முறை சரிதானா? நாம் பேசும்போது உச்சரிக்கும் சொற்களும் தவறாக உள்ளதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதுபற்றி ஒரு பதிவு போடவும்.”

நீங்கள் கேட்பது சரிதான். கஙசஞ என்பதை ka nga cha gnya என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலேயே தவறாகத்தான் பயிற்றுவிக்கின்றனர். அதாவது கஙசஞ உயிர்மெய் எழுத்துகளைச் சொல்லும்போது ச என்பதை cha என்றும், வல்லினங்கள் சொல்லும்போது மட்டும் அதை sa என்றும் சொல்லித்தருகின்றனர். கஸடதபற என்பதில் sa என்பதும் பிழைதான்! 

இதன் காரணமாகவே எந்தச்சொல்லை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதில் அநேகருக்கும் குழப்பம் உண்டு. பிழையோடே நாமும் கல்வி கற்று ஒப்பேற்றிவிட்டோம். 

எங்கள் ஊரில் மூக்குறிஞ்சி வாத்தியார் என்று இருந்தார். ஏன் இந்தப் பெயர்? சளி மூக்கடைப்பு ஒழுகலுடன் வரும் சிறுவர்களை “உறியாதே, உயிர்மெய்யைப் பழகு!” என்பாராம். அதன்படி நாம் சொல்லிப்பார்த்தால், வல்லினம் என்பது நாக்கின் பின்புறத்திலிருந்து ஒலி எழுந்து ஒவ்வொரு எழுத்துக்கும் மேல்தட்டில் நாக்கு தொடும் நிலை சிறிது சிறிதாக முன்னேறி வந்து உதடுகளில் வந்து முடிகிறது. ஆக ka cha என்பதே சரி, ka sa என்பது தவறு. இதைப்பொறுத்தே சொற்களை நாம் உச்சரிக்கும் விதம் அமைகிறது. இக்காலத்தில் அதை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்வதில்லை.  

திருப்புகழ் ஓதுதல் நாக்கு சுழற்சிக்கும் மூச்சுப்பயிற்சிக்கும் உகந்தது. "முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலில் உச்சரிப்பு ஒலிகள் உதடுகளுக்கும் முன்வரிசைப் பற்களுக்கும் ஒட்டியே அமையும். பிற்பாடு அது மெல்ல மத்திம நிலைக்கு வந்து, அதன்பின் நாக்கு பின்புறம் தொடுமாறு சொற்களை அருணகிரியார் அமைத்திருப்பார். மென்மையில் தொடங்கி அதன்பின் கரடுமுரடாகி, பிறகு இரண்டுமே கலந்து வரும். இதுதான் tongue twister என்பது. வாசியும் நரம்பு மண்டலம் சீர்பெறும்.

தமிழின் பெருமையை முழங்குவது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தத் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பைத் தமிழாசிரியர்கள் சிரத்தையுடன் ஆரம்பப்பள்ளியில் சொல்லித்தராவிட்டால் தமிழுக்குத்தான் இழுக்கு! வயதானபின்பு பற்கள் கொட்டிவிட்டால் எதுவும் செய்யமுடியாது, பல்லு போனால் சொல்லு போச்சு! பல்செட் போட்டால் உச்சரிப்பு ஏறக்குறைய அருகில் வந்தாலும் அது செயற்கையாக ஒலிக்கும். அதனால்தான் பல் விழுந்த பொக்கை வாயர்களை வேதமந்திரம் ஓத, பதிகம் பாசுரம் பாட அமர்த்த மாட்டார்கள். அவர்கள் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளலாம். 

அதனால்தான் வேத மந்திரங்களை ஓதச் சிறுவயதிலையே பயிற்சி தருவார்கள். வேத பாடசாலையில் சிறுவர்கள் ஸ்லோகம் சொல்லும்போது விரல் கணு அடையாளம் வைத்துக்கொண்டு கையை ஏற்றி இறக்கி ஒலி அழுத்தம் உணர்ந்து உரக்க உச்சரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வர்ணம் மாத்திரை பலம் சாமம் ஸ்வரம் என உச்சரிப்பை எங்கெங்கு எப்படி எவ்விதம் சொல்வது என்று அத்தியயனம் செய்யும்போது பிழையின்றிக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் நம் தமிழில் எது சரியான ஒலி என்று உணர்ந்து திருத்திக் கொள்ளும்போது வயதாகிவிடுகிறது. 😀

ஆக இப்படியாக மருத்துவமும் பக்தியும் சேர்ந்ததுதான் நம் மொழி. ஆய்த எழுத்தான ஃ சொல்லும்போது இரு காதுகளும் அடைத்து, அழுத்தம் மேற்புறம் எழுந்து ஆக்ஞா சக்கரம் பகுதியில் குவியும். அந்தப் பகுதிதான் மூன்றாவது கண் ஃ இருக்கும் இடம். உள்ளே ஊசித்துவாரப் பிரம்மரந்திர வாயில் அமைந்துள்ள இடம், ஆகாய சிதம்பரத்தின் வாயில்.   

-எஸ்.சந்திரசேகர் 





உழவாரம்!

கோயில் புனரமைப்பு, உழவாரம், நித்திய கட்டளைகள் சேவைகள், தன்னார்வத் தொண்டு செய்ய இதுபோன்ற தனியார் அறக்கட்டளை இயக்கங்கள் /மன்றங்கள் ஏகப்பட்டது உள்ளன. அதன் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வரவுசெலவு பற்றி யாம் எதுவும் அறியோம்.

கோயில் உண்டியலில் காசு போட்டால் அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும். சிறிய கோயிலுக்கு நிதியுதவி செய்யாது அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி. தட்டில் போட்டால் அர்ச்சகர் எந்த உழைப்புமின்றி ஆரத்தி காட்டிப்பிச்சை எடுக்கிறான் அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி.

கோயில் சிதிலமடைந்தால் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். யார் மூலம் எப்படிப் புனரமைக்க வேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான். இத்தனை நூற்றாண்டுகளில் சுவடு தெரியாமல் அழிந்துபோன சிவாலயங்கள் பல. அதை எல்லாம் மீட்க வேண்டும் என்றால் மனிதனால் ஆகாது.

வறுமையில் இருந்தாலும் தேசத்தின் சுபிட்சத்திற்காக வேதியர் தம் பணியைத் தொடரவேண்டும் என்கிறது சாத்திரம். பிறகு அவன் ஏன் பிச்சை எடுக்கவேண்டும்? 🤔

'அருள்மிகு' பெயர் தாங்கிய அரசுக்குச் சொந்தமான வசதியான கோயில்களில் அர்ச்சகர்களுக்குச் சொற்ப ஊதியம் நிர்ணயிப்பார்கள். நித்திய பூஜை அபிஷேகம் அலங்காரம் நிவேதனம் மற்றும் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். சிவராத்திரி/ பிரதோஷ காலத்தில் அவர்கள் செய்யும் தொடர் பணிக்கு இடுப்பு உடையும். ஆனால் இதில் உடலுழைப்பு எதுவும் இல்லையே என்று பலர் விமர்சிக்கின்றனர்.

"தமிழகத்தில், 26 ஆயிரம் கோவில்களில் வசதியோ, வருமானமோ கிடையாது. அர்ச்சகருக்கு மாதம், 60 ரூபாய் ஊதியம். அதுவும் மூன்றாண்டுகளாக பாக்கியுள்ளது. ஆனால், கோவில் கணக்காளருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம். அர்ச்சகர்களின் வாரிசுகள் யாரும், அப்பணிக்கு வருவதில்லை" என்று திரு. பொன்மாணிக்கவேல் தன் ஆய்வறிக்கையில் சொன்னார்.

விலைவாசி மிகக்குறைவாக உள்ள இக்காலத்தில் அர்ச்சகர் தாராளமாகவே ஜீவனம் செய்யலாம் என்பது பலருடைய கருத்து. 🤔 திருவள்ளுவர் குறிப்பிட்ட அறுதொழிலோரில் பலரும் கேலி பேசும் இந்த 'பிச்சை எடுக்கும்' வேதியரும் உண்டு.

த₄ர்மஏவ ஹதோ ஹந்தி த₄ர்மோ ரக்ஷதி ரக்ஷித: ||

தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது. தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது.

-எஸ்.சந்திரசேகர்



மஹா சிவராத்திரி

 ஓம் நமசிவாய 🕉️🌿

அண்டபகிரண்ட அணுவும் அசைந்தாடும்

அத்தன் கூத்தாட அகிலம் சுழன்றாடும்

உண்ட விடம் யாவும் இறுகி திண்டாடும் ஊழித்தாண்டவம் ஆடும் கணந்தோறும் கண்டம் சதிராட கடலும் எழும் பொங்கும்

காரிருள் சூழந்து எங்கும் புயல் ஓங்கும்

பிண்டம் இயங்கவும் ஒளியும் திரும்பவும்

பஞ்ச பூதனவன் தாளைப் பற்றுவோம்! 🙏

-எஸ்.சந்திரசேகர்



பங்குனி உத்திரம்!

 ஓம் சரவணபவ 🕉️🐓🦚🙏

ஆனைமுகன் தம்பிக்கு அநுபூதிகளுண்டு

ஆறுமுகம் கந்தனுக்கு வேதமுகம் உண்டு 

ஆனந்த முருகனுக்கு போரூர்கள் உண்டு

அனந்தன் மருகனுக்கு பதிகள் பலவுண்டு

ஆற்றுப்படை நாதனுக்கு காவடிகளுண்டு

அக்கினி வீரனுக்கு தமிழ்ச்சங்கம் உண்டு

அகரவுகரமகரப்பொருளில் குகனுமுண்டு

அமரா பதிக்கு சேனை அஸ்திரம் உண்டு

ஆண்டிக்கு உண்டியில் செல்வம் உண்டு

அவன் ஒரு கோமணமே உடுத்துவதுண்டு

ஆற்றல் மிகும் பங்குனி உத்திரம் உண்டு

அழகு வள்ளி தெய்வானை வாசியருண்டு

ஆதிசிவன் பெற்றதால் சிறப்புகளுண்டு

அன்னை சிவகாமியின் ஆசிகள் உண்டு!


-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 4 மார்ச், 2024

குன்றின்மேல் அணையா விளக்கு!

 


வாலையைப்பற்றியும் அவளைக் கண்டுணர்ந்து தரிசிக்கும் வழியையும், ஆறாதாரசக்கர தளத்தின் குணாம்சங்களையும் “வாலைக்கும்மி” நூலில் கொங்கணர் எளிதாகத் தந்துள்ளார். 

ஆறாதார சக்கரங்கள் வழியாக வாசி ஊர்ந்து சென்று ஆக்ஞா சக்கரத்தில் சுழுமுனையுடன் சங்கமிக்கும் இடமே திரிகூட பர்வதம். அது உண்ணாக்குக்கு மேலாக புரூ மத்தியில் உள்ளது. இடகலை பிங்கலை சுழுமுனையுடன் சங்கமிக்க அங்கே சுயம்பிரகாசம் ஒளிரும். (கபம் சளி இங்கே வாசியின் வழியை அடைத்துக்கொண்டு பிரச்சனை தரும். அதனால் வழலையை அகற்றவேண்டும் என்கிறார் சித்தர்.)  எண்கோண வடிவ நட்சத்திரம்போல் ஆடாமல் சுடர்விட்டுச் சுழலும். அங்கே அகத்தீ நிலையாக எறிந்துகொண்டு இருந்தாலும் தலை வெந்துவிடுவதில்லை! 

ஹம்-ஸம் ஓடும் ஆறாதாரங்களின் உச்சியில் அங்கே எண்ணெயில்லை, சுடரை அணைக்கத் தண்ணீர் இல்லை. வாசிக்கால் அந்தப்பாதையிலேயே பிசகின்றிப் போய்க்கொண்டிருந்தால் பாதைப் புலப்படும். எங்கே போவதற்கு? குன்றின் மேலே ஏறி ஆகாயக் கடுவெளியில் தீபஜோதியில் வாலைக்குமரியைத் தரிசிக்க!

மேலே ஏறிப்போகும் வழிதோறும் ஒவ்வொரு சக்கர தளத்திலும் தசநாத சப்தங்கள் கேட்கும். மேலே அவளுடைய சான்னித்தியம் வெளிப்பட சிலம்புச்சத்தம் கேட்கும். சிக்கலான பாதையைப்போல் தெரிந்தாலும் அகவிளக்கொளி மார்க்கத்தைக் காட்டும். அங்கே ஓங்காரம் ஒலிக்க வாலையவள் வீற்றிருப்பாள்!

-எஸ்.சந்திரசேகர்

சனி, 3 பிப்ரவரி, 2024

கவசக்கயிறு!

 தெருவில் எனக்கு முன்னே ஒடிசலான ஒரு முதியவர் ஊதிக்கொண்டு நடந்து போனார். அவருடைய இடது கணுக்காலில் கருப்பு கயிறு, கையில் ஒன்று கட்டியிருந்தார். பிய்ந்து போன ரப்பர் செருப்பு அணிந்து நிதானமாய் நடந்து சென்றார். அவர் இழுத்து விட்ட சிகரெட் புகை மண்டலம் காற்றில் எழும்பி என் முகத்தில் உராய்ந்து சென்றது. மூச்சு முட்டாத குறையாக விரைந்து நடந்து அவருக்கு முன்பாகச் சென்றுவிட்டேன். யாரெனத் திரும்பிப் பார்த்தேன்!

பொக்கை வாய், குழி விழுந்த கன்னம், இடுங்கிய கண்கள், சாம்பல் பூத்த சருமம்,   வயது பின்னெழுபதுகள் இருக்கும். மோப்ப ஆய்வில் அவர் சரக்கு அடிப்பவர் என்பது தெரிந்தது. உருவத்தைப் பார்த்த உடனே திகைத்தேன்.

நல்லொழுக்கம் பேணிய ஒரு தேகமாகத் தெரியவில்லை. இவருக்கு ஊரார் கண் திருஷ்டி படுவதற்கு அங்கே என்ன மிச்சம் இருக்கிறது? ஏற்கெனவே சீக்கு உடம்பு போல்தான் தெரிந்தது. புகையும் சரக்கும் அள்ளித்தரும் நோய்களே அதிகம். அப்படி இருக்கும்போது அந்தக் கருப்பு கயிறு எதற்கென்றே தெரியவில்லை.

முன்பெல்லாம் மிக அரிதாகத்தான் காலில் கருப்பு கட்டிவிடுவார்கள். ஆனால் இப்போது தெருவில் எதிர்படுவோர் எல்லோர் காலிலும் கயிறு பார்க்கிறேன். அது மந்தரித்ததா ஸ்டைலுக்காகவா என்பது தெரியவில்லை. கருப்புக் கயிறை எல்லா ராசிக்காரர்களும் கட்டக்கூடாது என கேள்விப்பட்டுள்ளேன், மிதுனம் துலாம் கும்பம் நீங்கலாக மற்ற ராசிகளுக்கு அது கெடுபலனைத் தருமாம். திருஷ்டி, காத்து கருப்பு, அடிக்கடி உடல்நலம் பாதிப்பு, போன்றவற்றுக்குத் தற்காலிகமாகக் கயிறு கட்டிவிடுவார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு மாதம் வரை கருப்பு வளையல் அணிவித்து திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம்.

வேப்பிலை சாமியாடிகள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இதுபோன்ற கயிறு கட்டிவிடுவார்கள். சில உபாசகர்கள் ருத்ர காயத்ரியை ஜெபித்து உருவேற்றிட வேண்டும் என்பார்கள். இக்காலத்தில் அக்கயிறு கட்டியதற்கான காரணமும் தெரியவில்லை, அணிந்தவர் நித்தம் ஜபம் செய்து சக்தியூட்டுகிறார்களா என்பதும் தெரியவில்லை. 🤔

-எஸ்.சந்திரசேகர்




வெள்ளி, 26 ஜனவரி, 2024

விட்டகுறையாலே நிறைவேறும்!

தென்னிந்தியாவின் கணிதமேதை என்றதும் எஸ். ராமானுஜன் பெயர்தான் நம் நினைவுக்கு வரும். அவர் கும்பகோணத்தில் பிறந்து அங்கே Town High School பள்ளிக்குச் சென்றார். ஆனால் குடும்பச் சூழல் காரணத்தால் மேற்கொண்டு தன் படிப்பைத் தொடரமுடியாமல் சிபாரிசு மூலம் மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் குமாஸ்தா பணிக்குச் சேர்ந்தார். ஆயினும் கணிதம் மீதிருந்த தீராத காதலால் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன. அப்போதே அவர் வீட்டுத் திண்ணையில் BA Hons. மாணவர்களுக்குக் கணிதப்பாடம் எடுத்தவர். முறையான உயர்கல்வி இல்லாததால் பல்கலைக்கழகத்தில் சேரமுடியாமல் இருந்தது. இவருடைய திறமைகளை அறிந்த பேராசிரியர் Hardy இவருக்கு லண்டனில் வாய்ப்பு தந்தார். Number Theory பற்றி அவர் பல நுட்பங்களையும் தீர்க்கப்படாத புதிர்களையும் தீர்த்தார். வெளிநாட்டில் நிலவிய குளிர் இவர் உடல்நலத்தைப் பாதித்தது. சைவ உணவையும் ஆச்சாரத்தையும் கடைப்பிடிக்கும் இவருக்கு அங்கு சரியான உணவும் இல்லை. காசநோய் பீடிக்கப்பட்ட நிலையில் ஊர் வந்து சேர்ந்தார். 1920இல் சென்னையில் காலமாகும்போது அவருக்கு வயது 32.  

1938ஆம் ஆண்டு அதே கும்பகோணத்தில் சி.பி.ராமானுஜம் என்பவர் பிறந்தார். அவர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தார், அதே Town High School பள்ளியில் படித்தார். பிற்பாடு சென்னைக்கு வந்தார் லயயோலா கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். கணிதத்தின் மேல் இருந்த மோகம் அவரைப் புதிய கோணத்தில் Number Theory தலைப்பில் ஆய்வுகள் செய்யத்தூண்டியது. தன் பதினெட்டாவது வயதில் மும்பை Tata Institute of Funamental Research கழகத்தில் சேர்ந்து பல வியக்கும் கோட்பாடுகளை எடுத்துரைத்தார். அங்கு நல்ல ஊதியம், பெயர் எல்லாம் கிடைத்தது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் எங்கே விட்டாரோ அங்கிருந்து இவர் தன் பணியைத் தொடர்ந்தார். பாரீஸ் சர்வகலாசாலையில் சிறப்புப் பதவியை ஏற்க அங்கே போகும்போதே உடல்நலம் குன்றியது. மீண்டும் மும்பைக்குத் திருப்பி அனுப்பபட்டார். Schizopherenia நோய்த்தாக்கம் முன்னேறிய நிலையில் இருந்ததால், 1974ஆம் வருடம் மறைந்தபோது அவருக்கு வயது 36.        

ஆக ஆன்மாவின் பயணம் என்பது அளிக்கப்பட பணியை முடிக்கும்வரை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு இந்த கணிதமேதைகளின் வாழ்க்கையே சான்று. 

முந்தைய கணிதமேதை ராமானுஜன் தன்னுடைய குலதெய்வமான நாமகிரித்தாயார் மேல் தீவிர பக்தி கொண்டிருந்தார். தான் கண்டுபிடிக்கும் சிக்கலான கணித சூத்திரங்கள் யாவும் அவள் தருவது என்று பகிரங்கமாகச் சொன்னவர். அந்த அர்ப்பணிப்பும் சரணாகதியும்தான் அவருடைய மறுபிறவியில் உயர்கல்வி, வாழ்க்கை வசதிகள், ஆராய்ச்சி வாய்ப்பு, பேராசிரியர் பணி, நல்ல ஊதியம் என எல்லாமே கிடைக்கச்செய்தது. இருந்தாலும், அந்த ஆன்மாவுக்கு இரண்டு பிறவிகளிலும் விதிக்கப்பட்ட ஆயுள் மிகச்சொற்பமே!

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 1 ஜனவரி, 2024

என்னவொரு ஆனந்தம்!

சற்றுமுன் ஐயனார் (சாஸ்தா) கோயிலில் திருக்கல்யாண அலங்காரத்தைக் கண்டு தரிசித்தேன். பொதுவாகவே கோயிலில் தரும் அன்னப்பிரசாதத்தை வரிசையில் நின்று தொன்னையில் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி... மிக அலாதியானது!👌

பிரதக்ஷணம் முடித்து வெளியே வரும்போது அங்கே ஒருவர் வாழையிலையைக் கையில் தர, அடுத்தவர் பெரிய அண்டாவிலிருந்து பொங்கல் புளியோதரையைக் கிண்டி நீளமான அன்னக்கரண்டியால் எடுத்து இலை நிறையப் பரிமாறினார். அக்கணம் என் கையில் நிறைவான அளவில் பிரசாதம் இருக்கும்போது ஓர் ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு மாறியதை உணர்ந்தேன். என் சுற்று வரும்போது... ஹையா... அண்டாவில் இன்னும் போதிய பிரசாதம் உள்ளது என்பதைக் கண்டதும் இலையை ஏந்தியபடி இரு கைகளை நீட்ட என்னவொரு துள்ளல்! 😀

ஆன்மிகப் பதிவு, பிரதோஷம் பாடல்கள், சித்தர் பாடல் உரைகள் என்று ஒரு புறம் முகநூலில் செய்யும் நான் சற்றுமுன் சிறுவயது குதூகல மனநிலையில் இருந்ததை ஆச்சரியமாய் நினைத்துப் பார்த்தேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 29 டிசம்பர், 2023

எல்லாம் அளவோடுதான்!

இப்படியொரு படத்தையும் அதன் கீழே வாசகமும் இருப்பதைப் பார்த்தேன்‌. இது சரியா? மலச்சிக்கல், மூட்டு வலி, நீரிழிவு, கர்ப்பப்பை கோளாறுகளை இது  தீர்க்கும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதனால் வருகிறது என்று ஆராயாமல் அதிகமாக இக்கிழங்கை உண்ணக்கூடாது. 

சராசரி ஆரோக்கியம் உள்ளவர்கள் பனங்கிழங்கை உண்டால் நன்மையைத் தரும். அவித்த இக்கிழங்கை என் சிறுவயதில் நிறைய சாப்பிட்டுள்ளேன்.

இதயம் சம்பந்தமான நோய், தண்டுவட எலும்புத் தேய்மானத்தால் வருகின்ற ஆஸ்ட்டியோ இடுப்புவலி பிரச்சனையும் மேற்படி சிக்கல்களை உண்டாக்கும். பரிசோதனை செய்து மேற்படி நாள்பட்ட நோய்க்கான காரணம் அறியாமல் மேம்போக்காக மலச்சிக்கல் மூட்டுவலிக்கான மருந்தை உண்டால் வேலை செய்யாது. ஆறாதார சக்கரங்கள் உள்ள பகுதிகளில் சக்தி ஓட்டம் தடைபடுவதால் அது மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும். உஷார்!

-எஸ்.சந்திரசேகர்



விதிவிலக்கு உண்டு!

 “கருத்தரிக்காத கன்று ஈன்றாத பசுவுக்குப் பால் சுரக்குமா? குருடாகிப் போன கண்ணில் பார்வையும் வெளிச்சமும் தெரியுமா? பேசாமல் மௌனம் காத்தால் அங்கே உரையாடல் ஏது கேள்விகள் ஏது? குணம்கெட்ட வேசிப்பெண்ணுக்கு வாழ்க்கை ஏது? எவ்வயதிலும் கல்லாமல் வீணாய்க் கழித்தவர்க்குக் கல்வி வாய்க்குமா? எதையும் காணமல் இருப்பவர்க்குக் காட்சிதான் தெரியுமா? மதித்து அண்டிப் பணியாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்குமா? வேடிக்கையாய் வாழ்க்கையைக் கழித்தால் எல்லாம் பாழாகிப்போகும் பார்” என்று  சுப்பிரமணியர் ஞானம் நூலில் முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசிக்கிறான்.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நமக்குப் பொதுவானது. ஆனால் இதற்கு மாறாகவும் சில சமயம் நடப்பதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கோ ஒரு பத்து வயது பசுவானது கன்று ஈனாமல் தினமும் 4 லிட்டர் பால் கறக்கிறது என்று முன் எப்போதோ செய்தித்தாளில் படித்துள்ளேன். புறக்கண்கள் குருடாகியும் அகக்கண்கள் மூலம் ஞானவொளிச்சுடர் பிரகாசத்தைக் கண்டவர்கள் உண்டு. மௌனம் நிலவினால் அங்கே வார்த்தைகள் இல்லை. ஆனால் பகவான் ரமணர் பேசாமல் இருந்து தன் சீடர்களுக்கு உபதேசித்தார். அவரிடம் இந்த அனுபவத்தை மஹாத்மா காந்தியும், பரமஹம்ச யோகனந்தாவும் பெற்றதாகத் தங்கள் சரிதையில் சொல்லியுள்ளதைப் படித்துள்ளேன். 

முறை தவறிய நடத்தையைக்கொண்ட பெண்ணுக்கு வாழ்க்கை அமைந்தாலும் அது நீண்டகாலம் ஆரோக்கியமாய் நீடிக்காது. கல்வி கல்லாதவனுக்கு ஞானம் கிட்டும். எப்போது? விட்டகுறையாலே எல்லா ஞானமும் ஓதாமலே ஓதப்பெற்றவனுக்கு. எத்தனையோ மஹான்கள் இதற்குச் சான்று. எதையும் நேரடியாகக் காணாதவர்க்கு நடந்தது என்ன என்று தெரியுமா? தெரியும்! தூரதிருஷ்டி சக்தியால் அந்தக் காட்சிகளை உட்கார்ந்த இடத்திலேயே காணலாம். பாண்டவர்- கௌரவர் இடையே நடக்கும் மகாபாரதப்போர்க் கட்சிகளை அரண்மனையில் இருந்தபடியே சஞ்சயன் திருதிராஷ்டிரர்க்கு விளக்கிச் சொன்னது இப்படித்தான். 

பணிவு பக்தி இல்லாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்க மாட்டார். குரு இல்லாத வித்தை பாழ். ஆனால் எந்த குருவையும் நாடிப்போகாமல் அந்த இறைவனே நம்மை நாடி வந்து குருவாக இருந்து போதித்தால் அதைவிட என்ன இருக்க முடியும்? ஒருவன் தன் வாழ்க்கையில் எதைப்பற்றியும் சிந்தியாமல், பந்த பாசம் சொத்து சுகம் எதிலும் நாட்டமின்றி விளையாட்டாய் இருப்பதுபோல் வெளியுலகிற்குத் தெரிந்தாலும், சித்தம் கலங்கிய வெள்ளிப்பாடு இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை வீணாகாமல் பரப்பிரமத்தையே சேரும்.

ஆக, முருகன் உபதேசித்த விதிகளுக்கு மாறாகவும் நடக்கும். அப்படி நடந்தால் அது அவனருளால் நடக்கும் திருவிளையாடலே! ஓம் சரவணபவ. 🙏

-எஸ்.சந்திரசேகர்